விஜய் படம் என்றாலே கதை திருட்டு குற்றச்சாட்டுக்கு ஆளாவது வாடிக்கையாகிவிட்டது.

"கத்தி', "மெர்சல்', "துப்பாக்கி' ஆகிய படங்கள் இதற்கு உதாரணம். ஆனால் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜின் நடவடிக்கைகளால்... ஏ.ஆர்.முருகதாஸின் கதை திருட்டுக்கு, விஜய் உட்பட பலரும் உடந்தையாக இருந்தது வெளியே வந்தது. நீதிமன்றம் மூலம் "செங்கோல்' என்கிற கதையை எழுதியிருந்த ராஜேந்திரனுக்கு "சர்கார்' படத்தில் கிரிடிட் கொடுக்கப்பட்டது.

vi

Advertisment

இப்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படமும் கதைத்திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இந்தியாவில் விளையாட்டுத் துறையில் அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக... திறமையான பல வீரர்களின் கனவுகள் சிதைக்கப்படுகின்றன. இதனடிப்படையில் மகளிர் கால் பந்தாட்ட பின்னணியில்தான் விஜய்-அட்லி படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்... கே.பி.செல்வா என்கிற குறும்பட இயக்குநர்... "விஜய் -அட்லி உருவாக்கி வரும் படக்கதை என்னுடையது. மகளிர் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து ஏற்கனவே குறும்படம் எடுத்துள்ளேன்' என நீதிமன்றம் சென்றார்.

Advertisment

"சர்கார்' கதைப் பிரச்சினையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் சரியான நடவடிக்கைகளை எடுத்திருந்ததால்... அந்த சங்கத்தை அணுகும்படி நீதிமன்றம் சொன்னதன் பேரில் வழக்கை வாபஸ் பெற்று, சங்கத்தை அணுகினார் செல்வா.

ஆனால்... "சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து குறைந்தபட்சம் ஆறு மாதங்களை கடந்திருக்கும் உறுப்பினர்களின் பிரச்சினைகள் மட்டுமே சங்கத்தாரால் விசாரிக்கப்படும். சமீபத்தில் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்த உங்களின் புகாரை ஏற்க இயலாது' என சங்க விதியை காரணம் காட்டி நிராகரித்து விட்டது சங்கம்.

இதனால் கதைக்கு உரிமை கோரி செல்வா மீண்டும் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

கதைப் புகார் கொடுப்பதற்காகவே சங்கத்தில் உறுப்பினர்களாக ஆவது என்கிற நிலை வந்தால் சங்கத்துக்கு சங்கடம்தானே.

sr

வித்தியாசமான கதையமைப்பில் படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன், விஜய் சேதுபதி-ஸ்ருதிஹாசன் ஜோடியை வைத்து "லாபம்' என்கிற படத்தை தொடங்கியுள்ளார்.

விவசாயத்துறையிலும், விவசாயத் தொழிலாளர்களிடம் மறைந்திருக்கும் அரசியல் குறித்தும் இந்தப் படம் பேசுமாம்.

"விவசாயம் என்பது நஷ்டம் ஏற்படுத்தும் தொழில்' என்கிற கருத்தை மாற்றியமைத்து, "லாபகரமாக செய்ய முடியும்...' என்கிற கருத்தை இந்தப் படத்தில் சொல்லவிருக்கிறார் ஜனநாதன்.

நெல்லை படியளந்து எண்ணிப் போடுகையில் முதல் படியை "ஒன்று' என்று குறிப்பிடாமல் "லாபம்' என்று குறிப்பிடுவார்கள் விவசாயிகள். அதையே படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

ஸ்ருதிஹாசனும், தமன்னாவும் நல்ல தோழிகள். "தமன்னா ஆணாக இருந்தால் அவரையே திருமணம் செய்வேன்' என சமீபத்தில் ஸ்ருதி சொல்லியிருந்தார்.

இந்த விஷயம் ஸ்ருதியின் லண்டன் காதலர் மைக்கேல் காதுக்கு எட்டி... அவர் ஸ்ருதியை கலாய்த்தாராம். இதை தமன்னா தெரியப்படுத்தியிருக்கிறார்.

-ஆர்.டி.எ(க்)ஸ்